Archive for the ‘அண்ணா கான்டீன்’ Category

அம்மா உணவகங்கள், கிளினுக்குகள் தாக்குவதால், திமுக மக்களை ஜெயித்து விட முடியாது!

மே 8, 2021

அம்மா உணவகங்கள், கிளினுக்குகள் தாக்குவதால், திமுக மக்களை ஜெயித்து விட முடியாது!

அம்மா உணவகங்கள் தாக்கப் படுதல்: சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ‘அம்மா’ என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன[1]. சென்னை ஜெ.ஜெ.நகரில் ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வந்த வந்த அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சைதாப்பேட்டை மாந்தோப் பள்ளி மற்றும் சிஐடி நகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இருந்த ‘அம்மா’ என்ற பெயர்களும் அடுத்தடுத்து மறைக்கப்பட்டுள்ளன[2]. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என தமிழக மக்கள் அன்பாக அழைத்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகும் நிலைத்திருக்கும் புகழை பார்த்து, பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர், உணவகத்தில் இருக்கும் அம்மா பெயரை மறைத்து அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளனர்[3]. திமுகவினரின் இந்த செயல்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன[4]. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த, அவரிக்காடு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டனர்[5]. அப்பகுதி மீனவர்கள் பெரும்பாலானோர் மருத்துவம் பார்த்து பயனடைந்து வந்த மினி கிளினிக்கில், அராஜகத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்[6].

அதிமுக கண்டனம்: அம்மா மினி கிளினிக் சேதப்படுத்தப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்னும் உன்னத நோக்குடன், அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாகவும், சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்தில் இருந்த கல்வெட்டை, கடப்பாரையால் சேதப்படுத்தி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதிகார திமிரில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யக்கோரி கோஷமிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

அம்மா மினி கிளினிக்குகள் ஊழியர்கள் கொரோனா பணிக்கு அனுப்பப் படுகின்றனர்: தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது[7]. இந்த மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது[8].  தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,000 அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால் மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மினி கிளினிக்குகள் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தது போல துணை சுகாதார நிலைங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்படுகிறதா அல்லது மூடுவிழா திட்டம் ஆரம்பமா?: அன்னுார் ஒன்றியத்தில், கணுவக்கரை, அக்கரை செங்கப்பள்ளி, ருத்திரியம்பாளையம், குப்பேபாளையம் என நான்கு இடங்களில் அமைக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக, நான்கு மினி கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன. அம்மா மினி கிளினிக்குகள் இவற்றில் தலா, ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன் கணுவக் கரையில் உள்ள அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி முதல் ருத்திரியம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, குப்பேபாளையம் ஆகிய மூன்று ஊர்களிலுள்ள மினி கிளினிக்குகள் மூடப்பட்டன[9]. இதுகுறித்து குப்பேபாளையம் மக்கள் கூறுகையில், ‘டாக்டர் மற்றும் செவிலியர்கள் கொரோனா சிகிச்சை பணிக்காக கோவை செல்கின்றனர். எனவே, இங்கு பணிபுரிய டாக்டர், செவிலியர் இல்லாததால், தற்காலிகமாக மூடப்படுகிறது, என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்[10]. மினி கிளினிக் செயல்பட்டதால் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. தற்போது எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அரசு மீண்டும் மினி கிளினிக்கை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், நான்கு மினி கிளினிக்குகள் அமைந்துள்ள பகுதிகளில் தலா மூன்று ஊராட்சி மக்கள் பயன்பெற்று வந்தனர். இவை மூடப்பட்டதால், 12 ஊராட்சி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கு திமுக வந்ததால் மமதை, செருக்குடன் வன்முறையில் இறங்கும் கழகக் கண்மணிகள்: பதவி ஏற்றதுடன் கருணாநிதி, அண்ணா, பெரியார் சமாதிகளுக்குச் சென்று வழிபட்டு வந்த ஸ்டாலின்,  அதே முறையில், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா-திராவிடத் தலைவர்களுக்கு மரியாதை செய்யவில்லை. ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்குச் சென்று மரியாதை செய்தது, அரசியல் என்றாகிறது. இதனால், அதிமுக-விரோதம், காழ்ப்பு, துவேசம் உறுதியான நிலையில், தொண்டர்கள் இன்னும் பல நடவடிக்கைகளில் இறங்கலாம். ஆட்சி மாறினாலும், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா-திராவிடத் தலைவர்களை தமிழகத்திலிருந்து அழித்துவிட முடியாது. இப்பொழுது, கணக்குகள் மாறியதால், வெற்றிக் கிடைத்டுள்ளது. ஐந்தாண்டுகள் பிறகு, மறுபடியும் அதிமுக வரும். எனவே, இத்தகைய சுழற்சி சந்தர்ப்பவாத அரசியலில், திமுக-அதிமுக மோதல்கள் தமிழகததின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும். வன்முறையும் பெருகலாம்.

அம்மா உணவகம் மாதிரி மற்ற மாநிலங்களில் பின்பற்றப் பட்டன: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இருந்த போது அம்மா உணவகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி இட்லி ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்றும், மதிய உணவு 5 ரூபாய் என்ற வீதத்திலும் விற்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறைந்த சம்பளம் வாங்குவோர், பள்ளி மாணவர்கள் என பலருக்கும் உணவளிக்கும் இடமாக மாறியது. டெல்லியிலும் கூட பொங்கல் சமயத்தில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள், சில வெளிநாட்டு அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு செயல்படுத்தப்படும் விதம் குறித்து தெரிந்து சென்றனர். இதனையடுத்து கர்நாடகாவில் இந்திரா கேண்டீன் திறக்கபட்டது; ராஜஸ்தானில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது ; இன்னும் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்ணா கேண்டீன் என்ற பெயரில் இதனை திறந்தார். அதன்படி மதிய உணவு 5 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது.  கடந்த 2014-ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதியாக மாநிலம் முழுவதும் அண்ணா கேண்டீன் உருவாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்[11]. அதன்படி முதல்கட்டமாக 160 இடங்களில் அண்ணா கேண்டின் அமைக்கப்பட்டது. இதில் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவு 15 ரூபாய்க்கும் இரவு உணவு 5 ரூபாய்க்கும் கொடுக்கப்படும். விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்[12].

ஜெயலலிதாஎதிர்ப்பு தேவையில்லை: ஜெயலலிதா பெயரில் இயங்கி வரும் அம்மா உணவகம், லட்சக் கணக்கான கூலித் தொழிலாளர், மற்ற ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு அளித்து வருகிறது. எம்,ஜி.ஆரின் மத்திய சத்துணவு திட்டம் போல பிரபலமாகியுள்ளது. இது போல ஆந்திராவில், தெலிங்கானாவில் உணவகங்கள் நடத்தப் படுகின்றன. அதே போல அம்மா கிளினிக்குகளில், வசதி இல்லாதவர்கள், ஏழைகள் மருத்துவ வசதி பெற்று வருகின்றனர். ஆகவே, இவற்றைத் தாக்குவதால், திமுகவினர் எதையும் சாதிக்க முடியாது.  இல்லை, அண்ணா-ராஜண்ணா மாதிரி மோதல்களை உருவாக்கினால், மக்கள் புரிந்து கொள்வர்.

© வேதபிரகாஷ்

07-05-2021


[1] நியூஸ்.ஜே, அம்மா உணவகங்களில்அம்மாஎன்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன, May 06, 2021 10:14 AM.

[2] https://www.newsj.tv/view/After-DMK-coming-to-power-Amma-Unavagam,-Amma-Clinics-come-under-attack-43079

[3] தினமலர், அம்மா மினி கிளினிக் சேதம், Added : மே 06, 2021  00:23

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2762630

[5] தினத்தந்தி, வேதாரண்யம் அருகே அம்மா மினி கிளினிக் பெயர் பதாகை பேனர் கிழிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு, பதிவு: மே 05,  2021 22:00 PM.

[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/05220025/attack-on-amma-clinic.vpf

[7] தமிழ்.ஏசியா.நெட்.நியூஸ், அதிர்ச்சி தகவல்தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடல்…!, By Vinoth Kumar, Tamil Nadu, First Published Apr 24, 2021, 5:56 PM IST; Last Updated Apr 24, 2021, 5:56 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/temporary-closure-of-2-000-amma-mini-clinic-qs2ik5

[9] தினமலர், மூன்று மினி கிளினிக்குகள் மூடல், Added : மே 05, 2021  23:46

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2762516

[11] விகடன், ஆந்திராவில்அண்ணா கேன்டீன்’ – 5 ரூபாய்க்கு சாப்பாடு!, ராம் பிரசாத், Published: 11 Jul 2018 8 PM; Updated:12 Jul 2018 1 PM

[12] https://www.vikatan.com/news/politics/130509-anna-canteen-serves-meals-rs-5-in-andhra-pradesh