Archive for the ‘விபத்திலிருந்து தப்பிய ரயில்’ Category

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு, பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்” !

ஜூன் 13, 2010

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு, பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்” !

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு

இன்ஜின் அதிர்வுடன் சென்ற ரெயில்: விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. டிரைவரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம், இந்தக் கொடூரத் திட்டம், புலி ஆதரவாளர்களின் கை வரிசையா என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். சேலத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (1064) விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் சேகரன் ரயிலை ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி ரயில் நிலையத்தை கடந்து பேரணி ரயில் நிலையத்திற்கு முன் உள்ள சித்தணி கிராமம் அருகே சென்ற போது (சென்னையில் இருந்து 145வது கிலோ மீட்டரை அடுத்து 300வது மீட்டர் தூரம் அருகே) ரயில் பாதையில், அதிகாலை 2.10 மணிக்கு ரயில் இன்ஜின் அதிர்வுடன் செல்வதை உணர்ந்தார். அடுத்த ரயில்வே ஸ்டேஷனான பேரணி ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ருத்திரபாண்டியிடம், தண்டவாளத்தில் அதிர்வு உள்ளதாகவும் அடுத்த ரயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும்படியும் கூறி விட்டுச்சென்றார். இதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் ருத்திரபாண்டி, ரயில்வே கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார்.

எதிரே தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிந்து ரயிலை சமயோஜிதமாக நிறுத்தினார்: அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்திருந்தது. உடனே அதிகாரிகள் அடுத்ததாக உள்ள முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 2.20 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி இன்ஜின் டிரைவரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ராக்போர்ட் ரயில் இன்ஜின் டிரைவர் கோபிநாத் ராவ், ரயிலை மெதுவாக செலுத்தி தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து வந்தார். அதிகாலை 2.43 மணிக்கு எதிரே தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிந்து ரயிலைசமயோஜிதமாக நிறுத்தினார். பள்ளம் இருந்த இடத்திற்கு அருகே 15 மீட்டர் தூரத்தில் ரயில் நின்றது. டிரைவர் கோபிநாத்ராவ், உதவி டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் இறங்கி வந்து தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் 2,500 பயணிகள் உயிர் தப்பினர்.

பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்”: விழுப்புரம் டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி.,பகலவன் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். ரயில் தண்டவாளம் மற்றும் சிலிப்பர் கட்டைகள் டெட்டனேட்டரை பயன்படுத்தி வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. தண்டவாளத்தைத் தகர்க்க சதிகாரர்கள், அருகிலுள்ள சித்தணியை சேர்ந்த சீனுவாசன் மகன் செந்தாமரைக் கண்ணன் என்பவரது நிலத்திலுள்ள விவசாய மின் இணைப்பு பெட்டியின் பூட்டை உடைத்து பியூஸ் கேரியரை கழற்றி மின்சார ஒயர் மூலம் டெட்டனேட்டரை வெடித்திருப்பது தெரிய வந்தது. டெட்டனேட்டர் வெடித்தவுடன் தண்டவாளம் 3.5 அடி நீளத்திற்கு நான்கு துண்டுகளாக வெடித்துச் சிதறி அருகே 500 மீட்டர் தூரத்தில் கிடந்தது. சிமென்ட் சிலிப்பர் கட்டைகள் இரண்டு பாதியளவிற்கு உடைந்து சிதறி கருங்கற்கள் நிலத்தில் கிடந்தன. ரயில்வே மின் கம்பியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே வெள்ளைத் தாளில் பேனாவால் எழுதப்பட்டிருந்த கடிதம் கிடந்தது. அதில் “இந்திய அரசே,ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்ஷே இந்திய வருகையை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணை போன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா, இனியும் மவுனம் காத்தால் புரியாது நமது மவுன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள் என எழுதப்பட்டிருந்தன.

விழுப்புரம் (12-06-2010): ரயில்வே தண்டவாளத்தை தகர்த்த வழக்கில் தமிழ் ஆர்வலர்கள் ஆறு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தை தகர்த்தனர். இதனால், விழுப்புரம் – சென்னை மார்க்கமாக ஆறு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இருப்பினும், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த கடிதத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கத்தினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர்.அதன் பேரில், தமிழ் தேசிய இயக்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜோதிநரசிம்மன், ஏழுமலை, இளங்கோ, கருணாநிதி, பாபு ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்[1].

வெடிவைத்து தகர்த்த விதம்: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி- பேரணி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள, சித்தணி கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை நாசகாரர்களால் வெடி வைத்து, ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது[2]. இதில், ஒரு தண்டவாளத்தின் பாதை மட்டும் 3 அடி தூரத்திற்கு சேதமாகியது. தண்டவாளத்தை தகர்க்க, மர்ம நபர்கள் சித்தணி கிராமத்தை சேர்ந்த செந்தாமரை கண்ணன் விவசாய பம்ப் செட்டிலிருந்து, மின் இணைப்பு மூலம் வெடி குண்டை வெடிக்க செய்து, ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளனர். இதில் மர்ம நபர்கள் முதல் முயற்சியாக, மின்கம்பத்தின் கீழே வைத்திருந்த மின் இணைப்பு பெட்டிக்கு, நேர் கிழக்கே உள்ள தண்டவாளத்தின் மூன்று சிலிப்பர் கட்டைகளின் மீதிருந்த, ஜல்லி கற்களை இரு புறத்திலும் அப்புறப்படுத்தி வெடி வைக்க முயன்றுள்ளனர். இருப்பினும், இந்த பகுதியில் மற்றொரு ரயில் பாதை அமைக்க, ஜல்லிகள் உயரமாக கொட்டியிருந்ததால் அப்பகுதியை தவிர்த்து விட்டு, தெற்கு புறமாக சமமான பகுதியில் மின் ஒயர் பயன்படுத்தி, மின் இணைப்பை செலுத்தி வெடிக்கச் செய்துள்ளனர்.மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் குண்டு வைத்து ரயில் தண்டவாளத்தை தகர்க்க, மர்ம நபர்கள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்திய சில்க் ஒயரை மழை நீரால் நனைந்திருந்த நிலத்தின் மண் மீது அமிழ்த்தியும், சில இடங்களில் ஜல்லிகளை வைத்து ஒயரை பிசைவு ஏற்படாமல் இருக்கவும் செய்திருந்தனர்.இந்த செயலில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் ஒரு சில நாட்கள் திட்டமிட்டு, இந்த இடத்தை தேர்வு செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

சிதம்பரத்திற்கு வைத்த குறியாக இருக்குமோ? விக்கிரவாண்டி : விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறியா என, போலீசார் விசாரிக்கின்றனர். தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில், போலீஸ் உயரதிகாரிகள் விசாரணையில், “திடுக்’ தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் இரவு திருச்சியிலிருந்து புறப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்று அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் மத்திய அமைச்சரின் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியாவிற்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, “இலங்கையில் தமிழினம் அழிவதற்கு துணை போன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம்”, என, வாசகங்கள் கிடந்தது. இதனால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய இருந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு வைத்த குறியாக இருக்குமோ என, போலீசார் விசாரிக்கின்றனர்[3].

பழைய வெடிப்பு சம்பவங்கள், முயற்சிகள்: கடந்த 1996ம் ஆண்டு ஏப்., 12ம் தேதி இரவு பேரணி ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டரை வெளியே அனுப்பி விட்டு பைப் குண்டு வைத்து ஸ்டஷனை தகர்க்க சதி நடந்தது. அதே போல் 1993ம் ஆண்டு நவ., 25ம் தேதி விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. 2002 நவ., 19ம் தேதியில் திருநாவலூர் அருகே உள்ள தொப்பையங்குப்பத்தில் போன் டவர் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. கடந்த ஜூன் 9ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய வருகையை கண்டித்து அவரது உருவ பொம்மைக்கு விக்கிரவாண்டி அண்ணாதுரை சிலை அருகே செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தமிழர் விடுதலை அமைப்புக்கு சம்பந்தம் உள்ளதா என, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு ராக்போர்ட் டிரைவர் பேட்டி : விபத்து தவிர்க்கப்பட்டது குறித்து ரயில் டிரைவர் கோபிநாத் ராவ் கூறியதாவது:கும்பகோணத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பணியில் இருந்தேன். விழுப்புரத்தில் அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டேன். முண்டியம்பாக்கத்தில் ரயிலை நிறுத்தி, வழியில் தண்டவாளத்தில் அதிர்வு இருப்பதாக முன்னால் சென்ற சேலம் எக்ஸ்பிரஸ் டிரைவர் புகார் கூறியுள்ளார். அதனால் ரயிலை பாதுகாப்பாக செலுத்தி செல்லுமாறு அறிவுறுத்தினர்.ரயிலை மெதுவாக செலுத்தி வந்த போது விக்கிரவாண்டியை தாண்டி பேரணி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையில் தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. உடனே ரயிலை நிறுத்தினேன். 15 மீட்டர் தூரத்தில் ரயில் நின்றது. இறங்கி வந்து பார்த்த போது ரயில் தண்டவாளம், இடது புறத்தில் 3 அடி அளவிற்கு தகர்க்கப்பட்டு, 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது.இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். ரயில் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியதாலும், முன்னெச்சரிக்கையாக ரயிலை செலுத்தியதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 2,500 பயணிகள் காப்பாற்றப்பட்டது குறித்து ஆண்டவனுக்கு நன்றி.இவ்வாறு கோபிநாத் ராவ் தெரிவித்தார்.


[1] தினமலர், தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக ஆறு பேரிடம் போலீசார் விசாரணை, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17918

[2] தினமலர், இரண்டு இடங்களில் தண்டவாளங்களை தகர்க்க திட்டம்?, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17892

[3] தினமலர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்குகுறி?’ தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில் தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17891