Posts Tagged ‘சினிமா’

குஷ்புவின் சாபம்: “இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை”.

மே 16, 2011

குஷ்புவின் சாபம்: இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.  அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 

சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு குஷ்பு மறுபடியும் உதாரணமமக உள்ளார். முன்பு கற்பு பற்றி பேசி, கலாச்சாரத்தை இழிவு படுத்திய அம்மணி இப்பொழுது, மக்களின் தேர்தல் முடிவுகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளது விநோதமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றதும், அதிர்த்து பிரச்சாரம் செய்த திரையுலகப் புள்ளிகள் திகைத்துள்ளன. சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் மறைந்துள்ளனர்; சிலர் தங்களுக்கு பாதுபாப்பு கேட்டு நடிக்கின்றனர்.

மக்களுக்குத்தான் தோல்வி: நடிகை குஷ்பு[1]: 13-05-2011, காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

திராவிடத்தில் ஊறிய அம்மணி கற்பு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் வியாக்யானம் கொடுத்தார். இப்பொழுது, அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிதர்சனத்தையும் மறந்து, தமிழ் மக்களை சாடியுள்ளது எந்த பகுத்தறிவின் வெளிப்பாடு என்று புரியவில்லை.

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்”, என்றார்[2]. சில நாட்களுக்கு முன்புதான் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார்[3].

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[4]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[5].

சின்னத்திரை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த குஷ்பு: இப்படி வீராப்பாக பேசினாலும், சின்னத்திரை சங்கத்தின் [Chinna Thirai Producers Council (CTPC)[6] ] தலைவி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது[7] வேடிக்கைத்தான்! “ஷூட்டிங் செட்யூல்” அதிகமாக உள்ளது என்று காரணம் வேறு சொல்லியிருக்கிறார். திமுகவின் தோல்வி குறித்து ஆராய்ச்சி செய்யபோகிறாராம்[8]. பார்ப்போம் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று.

சகநடிகையின் எதிர்ப்பு குரல்: இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[9]. அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா…. எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

குஷ்புவின் ஆணவப்பேச்சு: இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள். நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார். இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

குஷ்புவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர்: திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்[10]. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை. தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


அஜித் விவகாரம் பற்றி கருணாநிதி கடிதம் : முழுவிவரம்

பிப்ரவரி 26, 2010
அஜித் விவகாரம் பற்றி கருணாநிதி கடிதம் : முழுவிவரம்

Ajith issue : Chief Minister Karunanidhi''s Reaction
அஜித் விவகாரம் திரையுலகம் மட்டுமல்லாமல், அரசியல் உலகிலும் சூட்டை கிளப்பியுள்ள நிலையில் அந்த விவகாரம் பற்றி முதல்வர் கருணாநிதி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். தனக்கு திரையுலகினர் இதுவரை எடுத்த விழாக்கள் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, அஜித் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் கருணாநதி எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்துவரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை – ஏமாற்றம் – அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர் பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என் மீது என் தலைமையில் உள்ள அரசின் மீது நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலேகூட என் கலைவாழ்வுக்கு பொன்விழா – பவளவிழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். கலை உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே சறுக்கல் வராமல் அழுத்தமாக பதியவைத்து, அதே வேளையில் கலையுலகில் நலிந்தோர்க்கு நலநிதி வழங்கியும் – அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில் கலையுலகத்தினரின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் – திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை உருவாக்கியும் – படப்பிடிப்பு கட்டண சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும், திரைப்படத்துறையினர் நல வாரியம் அமைத்தும், அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக்கொண்டிருப்பதால், தான் பெற்ற குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும், தன்னை காத்திடும் கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும், நான் எங்கிருந்தாலும் அதாவது அரசுப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில் இரண்டையும் ஒன்றாகக்கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை எடுத்துள்ளனர்.

கடற்கரையில் 14 – 4 – 1996 அன்று எனக்கு கலையுலகப்பொன் விழாவினை கோலாகலமாக தம்பி விஜயகாந்த் மற்றும் கலையுலகச்செல்வர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து நடத்திய விழாவும் அளித்த பரிசும் அதன் பின்னர் நினைத்தாலே இன்னமும் என் நெஞ்சை நெகிழ வைக்கும் இனிய நண்பர் சிவாஜி தலைமையில் எனது ஐம்பதாண்டு கால கலையுலக பணியை முன்னிட்டும் 75வது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே பொன்விழாவும், பவளவிழாவும் 27- 9 – 1998 அன்று சென்னை நேரு அரங்கத்தில் நடந்ததும், வழங்கிய பரிசுகளும், கண்ணீரோடு கலந்த வாழ்த்துக்களும் மறக்கக் கூடியதா?

எல்லா முதலமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள் என்று வக்கணையோடு சொல்லி எரிச்சலை தணித்துக்கொள்வோர் சிலர் உண்டு. அந்த வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதலமைச்சர்களுக்கும் எடுக்கின்ற விழா வரிசையிலே ஒன்றல்ல, அதாவது பத்தோடு பதினொன்று அல்ல! திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும் நண்பர்களுக்கு, தோழர்களுக்கு அவர்தம் குடும்பங்கள் குறைவின்றி வாழ்வதற்கு, அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் காட்டிய நன்றிப்பெருக்கு அந்த விழா!

சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை உணர்ந்து, மகிழ்ந்து, உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக்காட்டி கொள்ள எடுத்த விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.

அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கருப்புப்பொட்டு வைத்து அனுப்புவதை பார்க்கிறோமே, அதைப்போன்றதொரு பொட்டு அந்த விழாவில் வைக்கப்பட்டதை பெரிதுபடுத்தி அந்தப்பொட்டின் வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.

அகில இந்தியப்புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதாப்பச்சன், கலைஞானி கமலஹாசன் இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து அள்ளித்தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி, அதைத்தொடர்ந்து எழுந்த கையொலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் இதுதான் சமயம் என்று சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று, இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள். அவை அதனைப் பூதாகரமாக உருவாக்கிட முனைந்தபோது, அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைத்திடும் முயற்சியாக, அஜித் என்னை சந்தித்து விளக்கமளித்தார். நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல, இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றிதான் குறிப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்ததும், திரையுலக தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும் பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம் புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று! கலகம் விளையும் கலையுலகத்தில் அதற்கு இந்த விழாவை ஒரு காரணம் ஆக்கலாம் என்று கருதியோர் தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து நிற்கின்றனர்.

இந்த கடிதத்தின் நோக்கத்தையும், இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் விழாவிலே கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன்நின்று நடத்தியவர்களும், அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்!

இவ்வா முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.